பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு, நாமக்கல்லில் கலைத்திருவிழா:
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மற்றும் நாமக்கல்லில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் செல்லும் பேருந்துகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா ஈரோடு மற்றும் நாமக்கலில் நடைபெறுகிறது. இக்கலைத்திருவிழா 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவர்களுக்கு ஈரோட்டிலும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவர்களுக்கு நாமக்கல்லிலும் நடைபெறுகிறது. இதில், இலக்கிய நாடகம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், பரதநாட்டியம், பறை இசை, மிருதங்கம், வயலின், வில்லுப்பாட்டு, பம்பை, உருமி, உடுக்கை, களிமண் சிற்பம், கீ-போர்டு, செவ்வியல் இசை, டிரம்ஸ், தனிநபர் நடிப்பு, பலகுரல், தெருக்கூத்து, பொம்மலாட்டம், புல்லாங்குழல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
இக்கலைத்திருவிழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் 388 பேர் கலந்து பங்கேற்கின்றனர். இதில், மாணவியர் 308 பேரும், மாணவர்கள் 80 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்த கலைத்திருவிழாவில் பங்குகொள்ளுவதற்காக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இருந்து 2 பேருந்துகளில் மாணவ, மாணவியர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமை வகித்து மாணவ, மாணவிகள் புறப்பட்டு செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில், உதவி திட் அலுவலர் முனியசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன், புள்ளியல் ஆய்வாளர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் அனிதா, சாமுவேல் ஜாண்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments